நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்


நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்
x

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

மதுரை

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

நடிகர் வடிவேலுவின் சொந்த ஊர் மதுரை ஆகும். அவரது வீடு, மதுரை விரகனூர் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியில் உள்ளது.

நடிகர் வடிவேலுவின் தந்தை நடராஜன், சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். தாயார் சரோஜினி என்ற பாப்பா. இவர் மதுரையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். வடிவேலுவுக்கு 4 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உள்ளனர்.

வடிவேலுவின் தாயார் சரோஜினிக்கு சில நாட்களாக முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

அவரது உடல் அஞ்சலிக்காக, மதுரை விரகனூரில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தாயின் உடல் அருகில் வடிவேலு மிகவும் சோகத்துடன் அமர்ந்து இருந்தார். அவரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார்.

அழகிரி அஞ்சலி

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நேரில் சென்று, சரோஜினி உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். அதே போல் அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலிக்கு பின்னர், நேற்று மாலை சரோஜினியின் உடல் மதுரை கீரைத்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story