நடிகர் விஜய் அலுவலகத்தில் தொழிலாளி பலி


நடிகர் விஜய் அலுவலகத்தில் தொழிலாளி பலி
x

நடிகர் விஜய் அலுவலகத்தில் தொழிலாளி பலி.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைமை அலுவலகத்தின் உட்பகுதிகள் புதுமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன் (வயது 34) என்பவர் கடந்த சில மாதங்களாக பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை சம்பளத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தை பார்க்க சென்ற பிரபாகரன், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மீண்டும் நடிகர் விஜய் அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த மேஸ்திரியிடம், தனக்கு பசிப்பதாகவும் பரோட்டா வாங்க ரூ.100 தரும்படியும் கேட்டு வாங்கி சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை உடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் வந்து பார்த்த போது அங்கு பிரபாகரன் கையிலும், வாயிலும் பரோட்டாவுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கானத்தூர் போலீசார், பிரபாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமான மது போதையில் பரோட்டா சாப்பிட்டதால் மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டு பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவரது சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story