நடிகர் விக்ரம் ரசிகர்கள் விரட்டியடிப்பு
திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரம் ரசிகர்கள் திரளாக வந்து ஆரவாரம் செய்ததால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டியடித்தனர்.
செம்பட்டு,ஆக.24-
திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரம் ரசிகர்கள் திரளாக வந்து ஆரவாரம் செய்ததால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டியடித்தனர்.
கோப்ரா படக்குழுவினர்
நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கும் கோப்ரா திரைப்படம் வருகிற 31-ந்தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதற்காக நேற்று நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி உள்பட கோப்ரா திரைப்பட குழுவினர் 9 பேர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 8.20 மணி அளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர்.
ஆரவாரத்தில் ரசிகர்கள்
இந்த தகவலை அறிந்து விக்ரமை வரவேற்க 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் விக்ரமை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு விசில் அடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். இதனிடையே ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் திருச்சி விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
கால்களால் உதைத்து விரட்டியடிப்பு
ரசிகர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் அவர்கள் செல்லவில்லை. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடிகர் விக்ரமின் ரசிகர்களை கைகளால் அடித்தும், காலால் எட்டி உதைத்தும் விரட்டி அடித்தனர். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பின் நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ரெட்டி மற்றும் படக்குழுவினரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலையில் பரபரப்பு ஏற்பட்டது.