நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் சாமி தரிசனம்


நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் சாமி தரிசனம்
x

இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த நிலையில் தஞ்சை அருகே உள்ள தங்களது குல தெய்வ கோவிலில் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த நிலையில் தஞ்சை அருகே உள்ள தங்களது குல தெய்வ கோவிலில் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி

தமிழ் திரையுலகில் 'நம்பர் ஒன்' நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு மே மாதம் கரம்பிடித்தார். இவர்களது திருமணம் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தது.இந்த தம்பதியினர் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி அறிவித்தனர். இந்த குழந்தைகளை வாடகை தாய் மூலம் இவர்கள் பெற்றுக்கொண்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்

இதற்கிடையே இந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி இருப்பதாக நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நயன்தாரா அறிவித்தார்.

ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோ நீல் என்.சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் வைத்து இருப்பதாக அவர் அறிவித்தார். தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்த நிலையில் தங்களது குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள வழுத்தூர் ஆற்றங்கரை தெருவில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நயன்தாரா தம்பதியினர் முடிவு செய்தனர்.

குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம்

அதன்படி நேற்று நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வந்தனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த இவர்கள் அங்கிருந்து கார் மூலம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் ஆற்றங்கரை தெருவில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.காரில் இருந்து இறங்கிய நயன்தாராவை பார்த்து அங்கு கூடியிருந்த ரசிகர்கள்'லேடி சூப்பர் ஸ்டார் வாழ்க' என கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கோவிலுக்குள் சென்ற நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பய பக்தியுடன் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.பின்னர் பரிவார தெய்வங்களான சன்னாசி சட முனீஸ்வரர், நல்ல வீரப்பசாமி, மதுரை வீரன், நொண்டி கருப்பன், நாகலிங்கேஸ்வரர் ஆகிய சாமிகளையும் வழிபட்டனர்.

ரசிகர்கள் குவிந்தனர்

நயன்தாரா கோவிலுக்கு வந்த தகவல் அறிந்து அய்யம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் கோவிலில் வந்து குவிந்தனர்.கோவிலில் இருந்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்த சிறுவர், சிறுமிகள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட நயன்தாரா காரில் ஏறி கிளம்பும் போது ரசிகர்களை பார்த்து சிரிப்புடன் கையசைத்து சென்றார்.நயன்தாரா தம்பதியினர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, கலைவாணி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story