தபால் நிலையங்களில் ஆதார் அட்டை பதிவு, திருத்தத்திற்கு சிறப்பு முகாம்-வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது
தர்மபுரி:
தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி புதிதாக ஆதார் அட்டை பெறவும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்யவும், விவசாயிகள் தங்களுடைய பிரதம மந்திரி கிசான்அட்டையில் முகவரியை இணைப்பதற்கும், ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் வருகிற 31-ந் தேதி வரை தர்மபுரி கோட்டத்திலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் நெறிமுறைப்படி பிரதம மந்திரி கிசான் அட்டையில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை இணைத்த விவசாயிகளுக்கு மட்டுமே நேரடி பணப்பலன் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெறும் முகாமில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். பிற துணை தபால் நிலையங்களில் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதவிர ஆதார் திருத்தம் மற்றும் பிரதம மந்திரி கிசான் அட்டையில் முகவரி திருத்தத்திற்காக தங்களுடைய கிராமங்களில் தனியாக சிறப்பு முகாம் நடத்த அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.