போதைக்கு அடிமையானால் வாழ்க்கை சீரழிந்துவிடும்


போதைக்கு அடிமையானால் வாழ்க்கை சீரழிந்துவிடும்
x

போதைக்கு அடிமையானால் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

வேலூர்

உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஊரீசு கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஆனிகமலாபிளாரன்ஸ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-

வாழ்க்கை சீரழியும்

இன்றைய இளைஞர்கள் எளிதில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். அதில் இருந்து அவர்களை மீட்பது காவல்துறைக்கு சிரமமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உங்களிடம் விழிப்புணர்வு சென்றடைந்தால் இச்சமூகத்துக்கு சென்றடையும். பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போதை பழக்கத்தால் இளமை வீணாகிறது. குடும்பம் பாதிப்படைகிறது. ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டால் இந்த சமூகமும் பாதிப்படையும். போதைக்கு அடிமையானால் வாழ்க்கை சீரழிந்து விடும். போதையில் சிக்கினால் அதில் இருந்து மீள்வது மிகக்கடினம். மாணவர்கள் நாம் பிற்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற இலக்கினை நோக்கி பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story