பார்வை திறன் குறைபாடுடையோர் பள்ளியில் ரூ.54 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்
தஞ்சையில் பார்வைதிறன் குறைபாடுடையோர் பள்ளியில் ரூ.54 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சையில் பார்வைதிறன் குறைபாடுடையோர் பள்ளியில் ரூ.54 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
புதிய பள்ளிக்கட்டிடம்
தஞ்சை மேம்பாலத்தில் அரசு பார்வைதிறன்குறைபாடுடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிடம் இல்லை. இதையடுத்து புதிதாக நமக்கு நாமே திட்டத்தில் கீழ் 4 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கான பங்களிப்பு தொகை ரூ.27 லட்சத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி ரூ.54 லட்சம் செலவில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேயர் திறந்து வைத்தார்
அதன்படி புதிய கட்டிடம் 3 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டதையடுத்து திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் புதிய கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டை மேயர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் சோபனா மாலதி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.