வேலூர் சுற்றுலா மாளிகையில் ரூ.7½ கோடியில் கூடுதல் கட்டிட பணிகள்
வேலூர் சுற்றுலா மாளிகையில் ரூ.7 கோடியே 65 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
ரூ.7½ கோடியில் கூடுதல் கட்டிடம்
வேலூர் அண்ணாசாலையில் அரசினர் சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு போதுமான வசதிகள் இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்த ஆண்டு சுற்றுலா மாளிகையில் ஆய்வு செய்து கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்பும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான வரைப்படம், நிதி உள்ளிட்டவைகள் அடங்கிய அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.7 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் கூடுதல் கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு தற்போது நடைபெற்று வரும் பணிகள், நிறைவடைந்த பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பணிகளை குறித்த காலக்கட்டத்துக்குள் விரைந்து தரமாக கட்டி முடிக்கும்படி உத்தரவிட்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் ராஜாமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் 1,260 சதுரமீட்டரில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு தரைத்தளம், முதல் தளத்தில் 6 வி.ஐ.பி. அறைகள், ஒரு வி.வி.ஐ.பி. அறை, லிப்ட் வசதியுடன் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த நேரத்தில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.