பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குமரி மாவட்டத்திற்கு கூடுதல் பஸ்கள்; அமைச்சர் சிவசங்கரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குமரி மாவட்டத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குமரி மாவட்டத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் மாணவ- மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு பயணம் செய்யவும் அரசு பஸ்களை வெகுவாக நம்பி உள்ளனர். மக்கள் தொகை பெருகி வருவதால் இப்போது உள்ள பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மற்றும் முக்கிய நகரங்களை கிராமங்களுடன் இணைக்கும் வகையிலும், அனைத்து ஊரிலிருந்தும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லவும் அதிக பஸ்களை இயக்க வேண்டும்.
மேலும் ரத்து செய்யப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களுக்கு பஸ் வசதிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார்கள். இவர்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பஸ் வசதி செய்து தர வேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, ேகாவை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கும், வேளாங்கண்ணி, பழனி போன்ற சுற்றுலா தலங்களுக்கும் போதிய பஸ் வசதி செய்து தர வேண்டும். மாவட்டத்தில் இயங்கும் பழுதடைந்த பஸ்களை மாற்றிவிட்டு நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.