பழையனூர் கிராமத்தில் கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு
திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரின்பேரில் பழையனூர் கிராமத்தில் கூடுதல் கலெக்டர் வீர பிரதாப்சிங் ஆய்வு செய்தார்.
வாணாபுரம்
திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரின்பேரில் பழையனூர் கிராமத்தில் கூடுதல் கலெக்டர் வீர பிரதாப்சிங் ஆய்வு செய்தார்.
திட்டப்பணிகள் முறைகேடு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் பழையனூர் கிராமம் உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் பெரிய கிராமமாக விளங்கும் இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக துர்காதேவி வெங்கடேசன் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஊராட்சியில் நடைபெறும் திட்ட பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
கூடுதல் கலெக்டர் ஆய்வு
இதனையடுத்து திருவண்ணாமலை கூடுதல் கலெக்டர் வீர பிரதாப்சிங் திடீரென அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சியில் உள்ள ஆவணங்களை அவர் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கிராம பகுதிகளில் நடைபெறும் பணிகளில் ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் எழுந்தது. இதையடுத்து நேரடியாக விசாரித்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதேவ்ஆனந்த், பரமேஸ்வரன் மற்றும் உதவி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கணக்கு புத்தகங்கள்
மேலும் பல்வேறு பணிகள் ஒதுக்கியதற்கான ஆவணங்கள் மற்றும் கணக்கு புத்தகங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.