அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்- நர்சுகளை நியமிக்க வேண்டும்
கருப்பம்புலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்-நர்சுகளை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
கருப்பம்புலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்-செவிலியர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரி
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் 1957-ம் ஆண்டு முதல் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இது வேதாரண்யம் தாலுகாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட ஆஸ்பத்திரியாகும்.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் இந்த அரசு ஆஸ்பத்திாி மூலம் பயன் அடைந்து வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ பிரிவும் செயல்பட்டு வருகிறது.
ஊழியர்கள் பற்றாக்குறை
இந்த நிலையில் தற்போது ஆஸ்பத்திரியில் ஊழியர்களின் பற்றாக்குறை இருந்து வருகிறது. பல நேரங்களில் இரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமம் ஏற்படுகிறது.
இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 26 படுக்கை வசதி கொண்ட இங்கு, 2 செவிலியர்கள், 1 ஆண் செவிலியர் மருந்தாளர் மட்டுமே உள்ளனர். ஆய்வகம் பணியில் ஒருவர் உள்ளார்.
கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்
இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் சேதமடைந்ததால் மகப்பேறு பிரிவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தில் மற்ற சிகிச்சை பிரிவுகளும் செயல்படுகின்றன. எனவே இங்கு கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்து 24 மணி நேரமும் முழுமையாக செயல்படும் ஆஸ்பத்திரியாக மாற்ற வேண்டும்.
மேலும், நிரந்தர தூய்மை பணியாளர்கள், அவசரகால வாகனம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்