கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்


கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Nov 2022 7:15 PM GMT (Updated: 26 Nov 2022 7:16 PM GMT)

கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வு குழுவிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வு குழுவிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

மருத்துவ குழு ஆய்வு

நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ள நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என மருத்துவ ஆய்வு குழு நேற்று முன்தினம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தியது. தொடர்ந்து அனைத்து வார்டுகளுக்கும் சென்று பார்வையிட்டது. சுகாதாரமாக ஆஸ்பத்திரி பராமரிக்கப்படுகிறதா, மருந்துகளின் இருப்புகள் என்ன? உள்ளிட்ட விவரங்களை சேகரித்தது.

தொடர்ந்து மருத்துவ குழு தலைவர் டாக்டர் அசோகன் தலைமையிலான ஆய்வு குழுவிடம் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் மனுக்கள் அளித்தனர். அதில் நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம், ஓவேலி மக்கள் இயக்கம் ஆகியவை சார்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

அனைத்து கட்டமைப்புகள்

கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படாததால் முதலுதவி சிகிச்சை கூட அளிப்பது இல்லை. இதனால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு லட்சம் பேர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆவர்.

இவர்களுக்கு முறையாக மருத்துவ வசதி கிடைப்பதில்லை. எனவே கூடுதல் டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும் மருத்துவ உபகரணங்களும், உயிர் காக்கும் கருவிகளும் கிடையாது. இதேபோல் தரமான கட்டிட வசதிகளும் இல்லை. எனவே அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. தொடர்ந்து குன்னூர் அரசு ஆஸ்பத்திரியை மருத்துவ ஆய்வு குழு நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. இதில் டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story