விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு தொிவித்தாா்.
செஞ்சி,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சங்க கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தார்.
இதில் சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு சங்க கொடியேற்றி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் செந்தில், சண்முகம், ஒன்றிய நிர்வாகிகள் அரிபுத்திரன், வெங்கடேசன், கிருஷ்ணராஜ், முத்துகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர், மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-
இன்றைக்கு இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு, பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவது போன்ற பல்வேறு காரணங்களுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளே காரணமாகும்.
விவசாய விளை பொருட்களுக்கு 2 மடங்கு விலை கொடுப்பதாக கூறிவிட்டு, நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 18 ரூபாயிலிருந்து 54 ரூபாய் தருகின்றனர். கரும்புக்கு ரூ.8,100 தருவதாக சொன்னார்கள், ஆனால் தரவில்லை.
விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு மட்டுமே விலை நிர்ணயம் செய்ய முடியும். விவசாயிகளுக்கு கட்டுபடியாக கூடியதாகவும், அவர்களது வாழ்வாதாரம் நிலைக்க கூடிய அளவுக்கு விலை பொருட்களுக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்தாலே போதும் என்றார் அவர்.