சாராய விற்பனையை ஒழிக்க கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்படும்
வேலூர் மாவட்டத்தில் சாராய விற்பனையை ஒழிக்க கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறினார்.
பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ராஜேஷ்கண்ணன் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை செங்குன்றம் உதவி கமிஷனராக பணியாற்றிய மணிவண்ணன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மணிவண்ணன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சட்டம்-ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். அதனால் இந்த மாவட்டத்தை பற்றி நன்கு அறிவேன். மாவட்டம் முழுவதும் கஞ்சா, சாராயம் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்தி சட்டம்-ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கவனம் செலுத்தப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் ஆலோசனைகள் வழங்கலாம். பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
கூடுதல் தனிப்படைகள்
சாராய விற்பனையை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு சாராய விற்பனை கண்காணிக்கப்படும். கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் சட்டத்துக்கு உட்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள். கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
அதையடுத்து 2-ம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 ஆண்கள், 18 பெண்களுக்கு பணி நியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வழங்கினார்.
ஆண்கள் திருச்சி மாவட்டத்திலும், பெண்கள் திருவள்ளூர் மாவட்டத்திலும் 9 மாத பயிற்சி மேற்கொள்ள உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.