குப்பை சேகரிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்


குப்பை சேகரிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்
x

அருப்புக்கோட்டை பகுதியில் குப்பை சேகரிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதியில் குப்பை சேகரிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்

அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தர லட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், என்ஜினீயர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:-

கவுன்சிலர் பாலசுப்பிரமணி:- வாருகால் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வார்டு முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஓடைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தூய்மை பணியாளர்கள்

செந்திவேல்:- மயானம் செல்லும் சாலையில் வாருகாலில் உள்ள கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஜெயகவிதா:- சுப்ரமணியம் தெருவில் சாலை அமைக்கக்கோரி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தவுடன் அதனை நிறைவேற்றி தந்துள்ளார். அதற்கு எனது வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரிவாக்க பகுதியில் குப்பைகள் வாங்குவதற்கு கூடுதல் தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு நன்றி

பூமிநாதன்:- உச்சிசாமி கோவில் 1-வது தெருவில் வாருகாலை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார்கள். இதனால் கழிவுநீர் வாருகாலில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் செல்கிறது. எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

ராமதிலகவதி:- தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதி அளித்தார். முன்னதாக நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story