கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி:ஒரு வாரத்தில் 10 அடி குறைந்த வைகை அணை நீர்மட்டம்:5 மாவட்ட விவசாயிகள் கவலை


கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி:ஒரு வாரத்தில் 10 அடி குறைந்த வைகை அணை நீர்மட்டம்:5 மாவட்ட விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தண்ணீர் திறப்பால் ஒரு வாரத்தில் வைகை அணை நீர்மட்டம் 10 அடி குறைந்தது.

தேனி


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. 5 மாவட்ட விவசாயம் மற்றும் நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கடந்த 2 ஆண்டுகளாக முழுக்கொள்ளளவிலேயே இருந்து. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

இதன்காரணமாக அதன்பிறகு வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டவே இல்லை. கடந்த 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவை, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கும் குறைவாக இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு வாரத்தில் வைகை அணை நீர்மட்டம் 10 அடி குறைந்து தற்போது 53 அடியாக உள்ளது. பாசனத்திற்கு திறக்கப்பட்ட பின் இருக்கும் தண்ணீரை கோடையில் குடிநீர் தேவைக்காக மட்டும் பயன்படுத்த பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். வைகை அணை நீர்மட்டம் 10 அடி குறைந்துள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் வைகை அணை நீர்மட்டம் 53.74 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 170 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 2 ஆயிரத்து 669 கனஅடியாகவும் இருந்தது.


Next Story