வைகை அணையில் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில், வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்துக்காக ஏற்கனவே கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அணையில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தண்ணீர் திறப்பு
இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு, பொத்தானை அழுத்தி மதகுகளில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர்கள் முரளிதரன் (தேனி), அனீஸ் சேகர் (மதுரை), மதுசூதன ரெட்டி (சிவகங்கை), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 லட்சம் ஏக்கர் நிலம்
அணையில் இருந்து தற்போது திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள 1,05,005 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாசனத்துக்காக அணையில் இருந்து மொத்தம் 8,461 மில்லியன் கனஅடி தண்ணீரை 120 நாட்களில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் 45 நாட்கள் தொடர்ச்சியாகவும், மீதமுள்ள நாட்களில் தண்ணீரின் இருப்பை பொறுத்து முறை வைத்து திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.77 அடியாக உள்ளது. அணைக்கு 3,472 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,200 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் வழியாகவும், 2,272 கனஅடி தண்ணீர் ஆற்றிலும் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.