பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; ஈரோட்டில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி
பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
இழப்பீடு
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிக்கூட மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கூடத்தை உடனடியாக திறக்க தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும். வன்முறையால் கோடி கணக்கான ரூபாய் மதிப்பில் பொருட்கள் மற்றும் கட்டிடம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டினை பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
பணி பாதுகாப்பு
இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஒரு பயத்தோடு இயங்கி கொண்டுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தமிழகத்தின் எதிர்கால தலைமுறையை வடித்து எடுப்பதில் தனியார் பள்ளிகளின் பங்கு முக்கியமானது. அதற்கான அங்கீகாரமும், மரியாதையும் அந்தந்த பள்ளிக்கூட தாளாளர்களுக்கு கிடைக்க வேண்டும்.
உண்மை நிலைக்கு தகுந்தாற்போல தான் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. நான் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என பேசியுள்ளேன். அது பரிசீலனையில் உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். குழந்தை இறந்துள்ளது என்பது வேதனையான விஷயம். அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளோம். பள்ளிக்கூட தாளாளர்கள் தவறு செய்யவில்லை என்றபோதும், அவர்கள் துன்புறுத்தப்படுவது சரியல்ல என்பதும் எங்களது நிலைப்பாடு.
இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.