குற்றங்களை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை


குற்றங்களை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தில் குற்றங்களை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நேற்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழுப்புரம் சரகத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனரா? கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? 2 அல்லது அதற்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனரா? எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? உள்ளிட்டவை குறித்து ஐ.ஜி. கண்ணன் கேட்டறிந்தார்.

மேலும் ஆவணங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் அவர் ஆய்வு செய்தார். அதோடு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார். தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க விழுப்புரம் சரகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அப்போது புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

உரிய பாதுகாப்பு நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வழக்கமான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது, அதிவேகமாக வாகனங்களில் செல்வதால் விபத்துகள் நேரிடுவது, பொது இடங்களில் விருந்து கொடுப்பது போன்ற இடையூறுகள், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்கள், சாலைகளில் செல்வோரை மறித்து வாழ்த்து கூறுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற தேவையற்ற சம்பவங்களை தடுப்பதற்கு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லும்போது, அதிகளவிலான கூட்டநெரிசலை தடுக்கவும், அங்கு ஏற்படும் சிறு, சிறு குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட போலீசார் செய்துள்ளனர். விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story