திருவாரூர் கமலாலய குளத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி
ஆடிஅமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஆடிஅமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஐஸ்வர்யம் தரும் அமாவாசை வழிபாடு
அமாவாசை என்பது சந்திரனின் ஒரு மாத வளர்பிறை, தேய்பிறை சுழற்சி காலத்தில் தேய்பிறை காலத்தில் இறுதியாக வருவது. அன்றைய தினம் இந்த பூமியின் மீது ஒரு விசேஷமான சக்தி நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. எனவே அமாவாசை தினத்தில் விரதம் இருந்து முன்னோர்கள் மற்றும் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது ஐஸ்வர்யங்களை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர் என்றும், சந்திரன் மனதுக்கு அதிபதியானவர் என்பதால் மகிழ்ச்சி, தெளிவான அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர் என்றும் கூறப்படுகிறது. எனவே சூரிய, சந்திரனை தாய், தந்தையை இழந்தவர்கள் அமாவாசை நாளில் வழிபடுகிறார்கள்.
ஆடி அமாவாசை
அமாவாசை நாட்களில் ஆடி மாதம் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இந்த நாட்களில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து ஆறு, குளங்கள், கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடும், ஆறு, குளத்தின் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
திருவாரூர் கமலாலய குளம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஏரளாமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் நேற்று நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்கினர். கமலாலய குளத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் குளத்தில் புனித நீராடினர். ஏராளமானோர் திரண்டு இருந்தால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தீயணைப்பு வீரர்கள் குளத்தில் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவாஞ்சியம் குப்த கங்கை
ஆடி அமாவாசையை முன்னிட்டு நன்னிலம் அருகே திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் உள்ள குப்த கங்கை தீர்த்த குளத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று குளத்தில் புனித நீராடி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
வடுவூர் கோதண்டராமர் கோவில்
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் கோவிலில் இருந்து வில்லேந்திய திருக்கோலத்தில் கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக புறப்பட்டு வடவாற்றங்கரையில் எழுந்தருளினார். அங்கு தீர்த்தபேரருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர். நிகழ்ச்சியில் வேத பாடசாலை முதல்வர் கோவிந்தன், மண்டகபடிதாரர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நரிக்குடி எமனேஸ்வரர் கோவில்
நீடாமங்கலம் அருகே நரிக்குடியில் உள்ள எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளி உள்ள சங்கடஹர மங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருராமேஸ்வரம்
மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று கோவில் குளத்தில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டையொட்டி ராமநாதசாமி, மங்களாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் பக்தர்களுக்காக சுகாதார வசதிகளை மன்னார்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பக்கிரிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பாமா கண்ணன், செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.