ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதை தகுதி வாய்ந்தவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம்.
முன்முனை மானியமாக அதிகபட்சமாக ரூ.1½ கோடி வரை பெறலாம். வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதிதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 18 முதல் 55 வயதுகுட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்கலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வித்தகுதி ஏதும் இல்லை.
மானியம்
வாகனங்களை முதன்மையாக கொண்டு செயல்படுத்தக்கூடிய தொழில்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக்லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி., அழகு நிலையம், ஆம்புலன்ஸ் சேவை, உடற்பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்குவோரும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். சுயமுதலீட்டில் தொழில் தொடங்கினாலும், இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் தொடங்கி பயன்பெற வேண்டும். தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in/AABCS என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்: 04142 -290116, 89255 33938 வாயிலாகவோ அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.