ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலவிடுதிகளில் சேர மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்


ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலவிடுதிகளில் சேர மாணவ  - மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2023 3:00 AM IST (Updated: 16 Jun 2023 7:10 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ -மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ -மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

விடுதிகள்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசால் ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் 29-ம், பழங்குடியினர் நல விடுதிகள் 2-ம் என மொத்தம் 31 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி பள்ளிக்கூட மாணவர்களுக்காக விடுதிகள் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அத்தாணி, சென்னம்பட்டி, ஆலாம்பாளையம், அந்தியூர், கவுந்தப்பாடி, தாளவாடி, பவானிசாகர், சத்தி, கோபி, நம்பியூர், குருமந்தூர், அறச்சலூர் ஆகிய பகுதிகளிலும், மாணவிகளுக்கான விடுதிகள் ஈரோடு, கொடுமுடி, பவானி, சென்னம்பட்டி, ஆலாம்பாளையம், அந்தியூர், கவுந்தப்பாடி, தாளவாடி, சத்தி, கோபி, கெட்டிசெவியூர், நம்பியூர் ஆகிய பகுதிகளிலும் இயங்கி வருகிறது.

இதேபோல் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கான விடுதிகள் ஈரோட்டில் தனித்தனியாக உள்ளது. மேலும் அரசு பழங்குடியினர் நல விடுதிகள் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

வங்கி கணக்கு

பள்ளிக்கூட விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதியில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர்க்கப்படுவார்கள். விடுதியில் உணவு, தங்கும் வசதி இலவசம். மேலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தலா 4 இணை சீருடைகள் வழங்கப்படும். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

மழைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் மாணவ -மாணவிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு அதில் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டு இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கட்டாயமாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் ஆதார் எண் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்ட வேண்டும்.

30-ந்தேதி கடைசிநாள்

இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதி உள்ள மாணவ -மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் 5-வது தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற 30-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே மாணவ -மாணவிகள் இந்த சலுகையை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


Next Story