ஆதிதிராவிடர்-பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவேரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். இத்திட்டத்தில் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் சார்ந்த தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2¼ லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3¾ லட்சம் மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் ஆர்.டி.ஓ. வளாகத்தில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.