ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்


ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க கடனுதவி  கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்து உள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலமாக புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்திடும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும், 18 முதல் 65 வயதுடையவராகவும், விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெறாதவராக இருக்க வேண்டும்.

மானியம்

ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியமும், பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

ஆவின் பாலகம் அமைக்க தேர்வு செய்யப்படும் இடம் 100 சதுர அடியில் சொந்த அல்லது குத்தகை அல்லது வாடகை கட்டிடமாகவும் இருக்க வேண்டும், ஆவின் நிறுவனத்துடன் போடப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2 வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரர் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. நிறுவனத்திடம் இருந்து உணவு உரிமம் பெற்றும், அடையாள பலகை, உட்புற வடிவமைப்புகளை விண்ணப்பதாரரே மேற்கொள்ள வேண்டும். குளிர்விப்பான் மற்றும் உறைவிப்பான் குறைந்தபட்ச கொள்ளளவு 200 லிட்டர் கொண்டதாகவும், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்ய வேண்டும். இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story