ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் கடனுதவி பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடனுதவி திட்டங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ அலுவலகம் மூலமாக பல்வேறு கடனுதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும் நிலம் வாங்குதல், நிலம் மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்பு, கிணறு அமைத்தல் திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 18 முதல் 65 வயது வரை உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வருமான உச்சவரம்பு
இதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதேபோல் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், மூக்கு கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம். மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவிகளுக்கு மானியத்துடன் கூடிய நிதி உதவி வழங்கப்படும். சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி மானியம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
வருமான சான்று
மேற்கண்ட திட்டங்களுக்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதள முகவரியான http://application.tahdco.com மற்றும் http://fast.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பற்றிய முழு விபரங்கள், புகைப்படம், சாதி மற்றும் வருமானச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி, விண்ணப்பதாரரின் தொலைபேசி மற்றும் கைப்பேசி, மின்னஞ்சல் முகவரி, திட்ட அறிக்கை மற்றும் பட்டா, சிட்டா விவரங்கள் அவசியமாகும்.
இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாட்கோ மூலமாக கடனுதவி பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிய சான்றுகளை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.