ஆதிகேசவ பெருமாள் கோவில் கொடிமரத்தில் பொருத்த கருடாழ்வார் சிலை, மணிகள் தயார்


ஆதிகேசவ பெருமாள் கோவில் கொடிமரத்தில் பொருத்த கருடாழ்வார் சிலை, மணிகள் தயார்
x

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கொடிமரத்தில் பொருத்த கருடாழ்வார் சிலை மற்றும் மணிகள் தயாராக உள்ளன.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கொடிமரத்தில் பொருத்த கருடாழ்வார் சிலை மற்றும் மணிகள் தயாராக உள்ளன.

கும்பாபிஷேகம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான திருப்பணிகளில் பெரும்பாலானவை நிறைவடைந்து விட்டன.

கொடி மரம்

கோவிலில் புதிதாக கொடி மரம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறுவப்பட்டது. அந்த கொடி மரத்தில் பொருத்துவதற்காக செம்புக்கவசங்களில் தங்கமுலாம் பூசும் பணி சென்னையில் நடந்தது.

கொடிமர கவசத்துக்கு தங்க முலாம் பூசும் பணிகளை மேற்கொண்ட கேரளாவைச்சேர்ந்த சிற்பி பத்தியூர் வினோத் பாபு கூறியதாவது:-

கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் நான் பல்வேறு கோவில்களில் கொடிமரங்கள் தொடர்பான வேலைகள் செய்துள்ளேன். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிறுவப்பட்டுள்ள கொடிமரத்தில் பொருத்தப்பட உள்ள செம்புக்கவசங்களில் தங்கமுலாம் பூசும்பணி முடிவடைந்து விட்டது.

கருடாழ்வார் சிலை

கொடி மரத்தின் உச்சியில் உட்கார்ந்த நிலையில் உள்ள கருடாழ்வார் சிலை பொருத்தப்பட உள்ளது. இதற்காக சுமார் 8 கிலோ எடை கொண்ட ஐம்பொன் உலோகத்தில் கருடாழ்வார் உருவம் வார்த்தெடுக்கப்பட்டது. தற்போது அதன்மீது தங்கமுலாம் பூசும் பணி முடிவடைந்து விட்டது. அது மட்டுமல்லாமல், கருடாழ்வாருடன் சுமார் ½ கிலோ எடையில் ஐம்பொன்னில் வார்த்தெடுக்கப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட இரு மணிகளும் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் அறநிலையத்துறையின் உத்தரவின் படி விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராம் வந்து, சாமி தரிசனம் செய்தார்.

தற்போது கோவிலின் நான்கு பிரகாரங்களிலும் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வருகிறார்கள்.


Next Story