திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடித் திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று அவதாரபதியில் காலை 5 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும் நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடி மரத்தை 5 முறையும் சுற்றி வலம் வந்தது. பின்னர் 7.05 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து 7.30 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையும், மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனியும் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வசித்குமார், அன்பாலயம் நிறுவனர் ஸ்ரீகுரு சிவச்சந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் முத்துகிருஷ்ணன், மோகன்குமார ராஜா, ராமமூர்த்தி, கணேசன், டி.பாலகிருஷ்ணன், எஸ்.பாலகிருஷ்ணன், செந்தில்வேல், காசிலிங்கம், ஆதிநாராயணன், கவாஸ்கர், சங்கரன், பணிவிடையாளர் குணசீலன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1-ந் தேதி தேரோட்டம்
திருவிழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 11-ம் திருநாளான ஆகஸ்டு 1-ந் தேதி பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.