பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை ஆடித்திருவாதிரை விழா
ராஜேந்திர சோழன் பிறந்தநாளையொட்டி பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவாதிரை விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா நாளை (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவாதிரை விழாவையொட்டி மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள் அமரும் இடம், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி, பக்தர்கள் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி உள்ளிட்ட விழா தொடர்பான பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆடித்திருவாதிரை விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் காலை 10 மணியளவில் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து, காலை 11 மணி முதல் மங்கள இசை, தப்பாட்டம், பரதநாட்டியம், கரகாட்டம், காவடி ஆட்டம், கிராமிய நடனம், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகிறது.