நுழைவு வரி வசூலிக்கும் ஆதிவாசி பெண்கள்


நுழைவு வரி வசூலிக்கும் ஆதிவாசி பெண்கள்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கர்நாடக எல்லையில் நுழைவு வரி வசூலிக்கும் பணியில் ஆதிவாசி பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

தமிழக-கர்நாடக எல்லையில் நுழைவு வரி வசூலிக்கும் பணியில் ஆதிவாசி பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நுழைவு வரி வசூல்

கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு உள்பட பல இடங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இதனால் கர்நாடக எல்லையான கக்கநல்லா மற்றும் தமிழக-கேரள எல்லையில் நாடுகாணி, பாட்டவயல், தாளூர் உள்பட பல இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நுழைவு வரி வசூலிக்கும் பொறுப்பு ஏல அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டது. பின்னர் நஷ்டம் ஏற்படுவதால் ஏலம் எடுக்க தனியார் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து நுழைவு வரி வசூலிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

ஆதிவாசி பெண்கள்

பின்னர் வேலைப்பளு காரணமாக வருவாய் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு நுழைவு வரி வசூலிக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது. இந்தநிலையில் நுழைவு வரி வசூலிப்பதில் பல்வேறு புகார்கள் எழுந்தது. இந்தநிலையில் கக்கநல்லா, நாடுகாணி சோதனை சாவடிகளில் நுழைவு வரி வசூலிப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதற்கட்டமாக பெண்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது கோடை சீசன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவது அதிகரித்து வருகிறது. இதனால் நுழைவு வரி வசூலிக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதில் கக்கநல்லா சோதனை சாவடியில் ஆதிவாசி பெண்களும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.


Next Story