ஆதிவாசி இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்
பந்தலூரில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, ஆதிவாசி இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை கூறினார்.
பந்தலூர்,
பந்தலூரில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, ஆதிவாசி இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை கூறினார்.
தண்ணீர் தொட்டிகள்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வட்டக்கொல்லி கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்து கொண்டு தண்ணீர் தொட்டிகள், புத்தாடைகளை வழங்கினார். தொடர்ந்து பொன்னானியில் கட்டப்பட்ட ஆதிவாசி மக்களின் நல மையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போதை பழக்கம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இன்றைக்கு போதை பழக்கம் பரவலாக அதிகரித்துள்ளது. ஆதிவாசி மக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்த வேண்டும். கல்வியால் மட்டுமே சமுதாயம் முன்னேற்றம் பெறும். ஆதிவாசி இளைஞர்கள் போதை பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், கல்வியில் வளர்ச்சி பெற்று தங்கள் சமூகத்தை மேம்படுத்தவும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பந்தலூரில் ஹெல்மெட்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், மகேஷ் குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் தண்டபாணி வரவேற்றார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் நன்றி கூறினார். முன்னதாக தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு உள்ள பதிவேடுகளை சரிபார்த்தார். தொடர்ந்து இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். தொடர்ந்து பொதுமக்களிடமும் நல்லுறவு பேண வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.