சொத்தில் பங்கு கேட்டு சிவாஜி கணேசன் மகள்கள் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு
சொத்தில் பங்கு கேட்டு சிவாஜி கணேசனின் மகள்கள் தொடர்ந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள்கள், சாந்தி, ராஜ்வி ஆகியோர் தங்கள் தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், "எங்கள் தந்தை சுயமாக சம்பாதித்த ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளை எங்கள் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் முறையாக பராமரிக்கவில்லை. பல சொத்துகளை விற்பனை செய்து எங்களை மோசடி செய்து விட்டனர். ஆயிரம் சவரன் தங்க நகைகள், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் அவர்கள் அபரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டர் பங்குகளையும் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்டனர். எனவே, எங்கள் தந்தை சம்பாத்தியம் செய்த சொத்துகளை அவர்கள் விற்பனை செய்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். சொத்தில் எங்களுக்கு பங்கு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
குடும்ப பிரச்சினை
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபு சார்பில் மூத்த வக்கீல் பி.ஆர்.ராமன், சாந்தி தியேட்டர் கட்டிடம் தொடர்பான ஒப்பந்தங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அது மனுதாரர்கள் இருவருக்கும் நன்றாக தெரியும். அப்படி இருந்தும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்றார். சாந்தி தியேட்டர் கட்டுமான ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், குடும்பத்தினர் இடையே உள்ள பிரச்சினையால், இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு என்று வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கை தள்ளிவைக்க கோரியதால், விசாரணை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.