கம்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
கம்பத்தில், சுமுக முடிவு எட்டப்படாததால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கம்பத்தில், சின்னவாய்க்கால் ரோடு பகுதியில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் 90-க்கும் மேற்பட்டோர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வீடு, கட்டிடங்கள் கட்டி வசித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற கம்பம் நகராட்சி ஆணையாளருக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். அதில், ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் மாற்று இடம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன், கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், நகரமைப்பு அலுவலர் சலீம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது, லோயர்கேம்ப் மற்றும் கோம்பை ஆகிய இடங்களில் குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளதாகவும், அங்கு குடியிருந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் என்றனர். அதற்கு பொதுமக்கள் தங்களால் பணம் கொடுத்து செல்ல முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சுமதி கணபதி, செந்தில்குமார், பி.முருகன், எஸ்.முருகன், மாதவன் ஆகியோர் அதிகாரிகளிடம் பேசும்போது, குடிசை மாற்று வாரியம் மூலம் இலவசமாக வீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர். அதற்கு தாசில்தார் வாய்ப்பில்லை என்றார். இவ்வாறு காரசார விவாதம் நடந்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதுகுறித்து நகரமைப்பு அலுவலர் சலீம் கூறுகையில், ஆலோசனை கூட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்த பொதுமக்கள் பலர் பங்கேற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.