தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை-நாளை நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 சதவீத இடஒதுக்கீடு
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2022-2023-ம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் கடந்த 25-ந் தேதி வரை பெறப்பட்டது.
இணையதளம் வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் விவரங்கள் நேற்று மாலை தொடர்புடைய மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.
குலுக்கல் முறையில் தேர்வு
நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும். நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் தகுதியான விண்ணப்பங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) குலுக்கல் முறையில் துறை அலுவலர்கள் முன்னிலையில் சேர்க்கைக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ள ஆதரவற்றோர், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்பே சேர்க்கை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கை ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடந்தது.