கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் 129 மாணவர்கள் சேர்க்கை
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் 129 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் 150 மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளிகளில் படித்த 10 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 118 இடங்களில், 115 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன. மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 22 இடங்களில், கடந்த 4-ந் தேதி வரை 4 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இவற்றில் காலியாக உள்ள 18 இடங்கள் 2-வது சுற்று சேர்க்கையில் நிரப்பப்படும்.
பட்டய படிப்புகள்
மொத்தம் உள்ள 150 இடங்களில் இதுவரை 129 மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்துள்ளது. தற்போது 21 இடங்கள் காலியாக உள்ளன. அவை வருகிற 14-ந் தேதிக்குள் நிரப்பப்படும். மேலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டில் இருந்து ஆய்வு கூட நிபுணர் (2 ஆண்டு பட்டய படிப்பிற்கான 25 இடங்கள்), மயக்கவியல் தொழில் நுட்ப வல்லுனர், அறுவை அரங்க தொழில் நுட்ப வல்லுனர், அவசர சிகிச்சை தொழில் நுட்ப வல்லுனர், இ.சி.ஜி. டிரேடுமில் தொழில் நுட்ப வல்லுனர், டயாலிசிஸ் தொழில் நுட்ப வல்லுனர், எலும்பு முறிவு கட்டு தொழில்நுட்ப வல்லுனர் (இவை அனைத்திற்கும் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பிற்கான தலா 10 இடங்கள்) ஆகியவற்றின் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்பிற்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை 2022-2023-ம் ஆண்டிற்கு மாநில அளவில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.