தனியார் சுய நிதி பள்ளிகளில்25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைவிண்ணப்பிக்க 18-ந்தேதி கடைசி நாள்


தனியார் சுய நிதி பள்ளிகளில்25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைவிண்ணப்பிக்க 18-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சுய நிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி கடைசி நாளாகும்.

கடலூர்


25 சதவீத இட ஒதுக்கீடு

சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் எல்.கே.ஜி பிரிவில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கடந்த 2013-2014-ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-2019-ம் கல்வியாண்டு முதல் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது 2023-24-ம் கல்வியாண்டில் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக் கல்வித் துறையின் rte.tnschool.gov.in என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்பித்து வருகிறார்கள். வருகிற 18.5.2023 வரை இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

எல்.கே.ஜி. வகுப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கு (பிறப்புச்சான்று, மருத்துவச்சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல்) ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம்

குழந்தைகளுக்கு சேர்க்கை கோரும் பள்ளி பெற்றோரின் இருப்பிடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். இதற்கு இருப்பிடச்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு கீழ் உள்ள அனைத்து பிரிவினரும், நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானச்சான்று சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேரும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story