அரசுப்பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை:ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் மூலம் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஊர்வலம் சென்று பொதுமக்களுக்கு இலவச திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் மூலம் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஊர்வலம் சென்று பொதுமக்களுக்கு இலவச திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின்படி அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக மாணவர் சேர்க்கை ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் நேற்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
துண்டுபிரசுரம்
பள்ளிக்கூடத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு திட்டம் ஆகியவை குறித்தும், அரசு பள்ளிக்கூடங்களில் படிப்பதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் திறமையை வளர்க்கும் தேன்சிட்டு இதழ், வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், உதவித்தொகை மற்றும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. பள்ளிக்கூடத்தின் முன்பு நின்று கொண்டும், பள்ளியை ஒட்டி உள்ள வீதிகளில் ஊர்வலமாக சுற்றி வந்தும் பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சியின் போது பள்ளியின் அனைத்து ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
காவிரி ரோடு-திருநகர்காலனி
ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை சாந்தாமணி தலைமையில் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பிரசாரம் நடந்தது. மாணவ-மாணவிகள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். ஆசிரியர் லோகநாதன் ஆட்டோவில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். அத்துடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலி பெருக்கியில் அரசு பள்ளிக்கூடங்களின் சிறப்புகள் பற்றியும் எடுத்துக்கூறி பிரசாரம் செய்தார்.
ஈரோடு திருநகர்காலனி பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை அருணாதேவி தலைமையில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. மாணவ-மாணவிகளுடன், பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் வாத்தியக்கருவிகள் இசைத்தபடி சென்றது அனைவரையும் கவர்ந்தது.
இதேபோல் பல்வேறு பள்ளிக்கூடங்களிலும் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.