கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை


கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
x

கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன், வட்டியில்லா கடன், கால்நடை பாராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுய உதவிக்குழுக்கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடந்து வருகிறது. எனவே, விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் படிவத்தோடு பங்குத் தொகையாக ரூ.100-ம் நுழைவுக்கட்டணம் ரூ.10-ம் செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். மேலும் உரிய கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயன்பெறலாம். அத்துடன், சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு உத்தமபாளையம், பெரியகுளம் துணைப்பதிவாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story