சுயநிதி பள்ளிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை-நாளை மறுநாள் நடக்கிறது


சுயநிதி பள்ளிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை-நாளை மறுநாள் நடக்கிறது
x

சேலம் மாவட்டத்தில் உள்ள சுயநிதி பள்ளிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள சுயநிதி பள்ளிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பங்கள்

சேலம் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு உள்ளன. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் இன்று (சனிக்கிழமை) மாலை ஒட்டப்படும்.

தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக உள்ள பள்ளிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) குலுக்கல் முறையில் தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட குறைவாக உள்ள பள்ளிகளில் உரிய நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற உள்ளது.

மாணவர் சேர்க்கை

மேலும் பள்ளி பொது தேர்வு மையமாக செயல்படாவிட்டால் நாளை மறுநாள் காலை குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையிலும், தேர்வு மையமாக இருந்தால் தேர்வு முடிந்த பிறகும் நடைபெறும்.

எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story