அ.தி.மு.க. சட்ட விதியை காப்பாற்ற 2-வது தர்மயுத்தம் -ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


அ.தி.மு.க. சட்ட விதியை காப்பாற்ற 2-வது தர்மயுத்தம் -ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x

எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதா கடைபிடித்த அ.தி.மு.க. சட்ட விதியை காப்பாற்றவே 2-வது தர்மயுத்தம் தொடங்கி உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் நேற்று காலை நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆவணமாக விளங்குகிறது

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஒரு தனிப்பட்ட கட்சியாகவும், தமிழகத்தில் அதிகமான நாட்கள் ஆண்ட கட்சியும் அ.தி.மு.க.தான் என்ற வரலாற்றையும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பெற்றுத் தந்து இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து விலக்கியபோது எம்.ஜி.ஆரின் இதயத்தில் உதித்த கொள்கைதான் லட்சோப லட்சம் தொண்டர்களை கொண்ட தலைமை பொறுப்பை ஏற்பவர்களை நீக்குகின்ற அதிகாரம் ஒரு சில மாவட்ட செயலாளர்கள் அல்லது எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் இருக்கக் கூடாது என்பது. எனவே, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பவர்களை கட்சியின் அடிப்படை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்ட விதியை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அந்த அடிப்படையில்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்சியின் தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு தலைமை பொறுப்பிற்கு வந்தனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அந்த பதவியும் 1½ கோடி தொண்டர்களின் வாக்குகளை பெற்றுதான் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக் காப்பாற்றிய ஜனநாயக நடைமுறைகளை தூக்கி எறிந்துவிட்டு, தனது இரும்பு பிடிக்குள் அ.தி.மு.க.வை கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், தற்போதும் தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிதான் ஆவணமாக விளங்கிக்கொண்டு இருக்கிறது.

2-வது தர்மயுத்தம்

இந்தநிலையில், 2-வது தர்மயுத்தம் எதற்காக ஆரம்பித்தோம் என்றால், எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதா கடைபிடித்த அ.தி.மு.க. சட்ட விதியை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற தர்மயுத்தம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறது. அந்த சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஒரு தொண்டன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி வரும் போது முதல்-அமைச்சராக அமரும் வாய்பை நாங்கள் உருவாக்குவோம். அது தான் எங்கள் தர்மயுத்தத்தின் தலையாய கொள்கை. இது தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எண்ணம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நமது வேட்பாளரை வாபஸ் பெற்று, அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் என்று அறிவித்த பின்னரும் ஒரு சின்ன அறிகுறி கூட அங்கிருந்து வரவில்லை. எந்த அளவிற்கு மனதில் கொடூரமான புத்தியை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை தனது இரும்பு பிடிக்குள் அடக்கி விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்தார்

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ''அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்து தான் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு நடைபெற்றது. சர்வாதிகார உச்சநிலைக்கு சென்று எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். பொருளாளர் என்ற முறையில் வரவு செலவு கணக்குகளை நான் சமர்பிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் பல்வேறு அராஜகங்கள் நடைபெற்றதை நாட்டு மக்கள் தொலைக்காட்சிகளில் நேரலை மூலம் கண்டார்கள். அந்த அளவிற்கு அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். நான் அவரது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அந்த தகுதியை அவர் அன்றைக்கே இழந்துவிட்டார்'' என்றார்.


Next Story