அ.தி.மு.க. ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்
ஆண்டிமடத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ராமச்சந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் பேசும்போது கூறியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் அடுத்த மாதம் 2-ந் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் விவரங்களை மாவட்ட கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அடுத்த மாதம் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை பலப்படுத்தி 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி அடைய பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் செல்வையா, தாமரை குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், அரியலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பாஸ்கர் உள்பட அனைத்து அணியினரும் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து வரவேற்றார். முடிவில் வரதராஜன்பேட்டை பேரூர் கழக செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.