அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 19 July 2023 1:15 AM IST (Updated: 19 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசை கண்டித்து நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினர்.

அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ, துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல்லில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் ஆர்ப்பாட்டம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) மதுரையில் நடைபெறும் மாநாட்டில் திரளான தொண்டர்கள் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் மதுரை மாநாட்டின் 'லோகோ'வை முன்னாள் அமைச்சர்கள் வெளியிட்டனர்.

ஊழலில் ஊறிய தி.மு.க.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஊழலில் ஊறிய தி.மு.க.வை எதிர்த்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். இதேபோல் தி.மு.க.வின் ஊழலை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி போராடுவதால் அ.தி.மு.க. மேலும் வளர்ந்துள்ளது. தற்போதும் தி.மு.க.வை ஒழிக்கும் முதல் தீப்பந்தம் அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஒருபோதும் பிளவுபடவில்லை. பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு வந்துள்ளது.

கொடநாடு சம்பவத்தில் உண்மை வெளியே வரவேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் கூறுகிறார். அதற்காக போராட்டம் நடத்துகிறார். அவர் முதல்-அமைச்சராக இருந்த போது என்ன செய்தார். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததால் வீழ்ச்சியை சந்தித்து வருகிறார். அவருடைய மகனின் எம்.பி. பதவி பறிபோகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மாவின் மைத்துனன் போன்றும், புத்தரின் பேரன் போன்றும் பேசுகிறார். கருணாநிதியின் மகனாக பிறந்ததால் பதவிக்கு வந்துவிட்டார். தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். எனவே நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும், என்றார்.

மக்கள் நலன் கருதாத அரசு

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து இருக்கிறது. இந்த தலைமுறையில் இதுபோன்று விலை உயர்வு ஏற்பட்டதில்லை. தக்காளி காட்சி பொருளாகி விட்டது. சின்ன வெங்காயத்தின் விலையை நினைத்தாலே பெண்களுக்கு கண்ணீர் வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் தினமும் தி.மு.க. அரசை வசைபாடுகின்றனர். மக்களின் நலனை கருதாமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது.

இதற்கிடையே தி.மு.க. அமைச்சர்கள் ஒவ்வொரு நபராக ஊழலில் சிக்கி வருகின்றனர். நாளை எந்த அமைச்சர் சிக்குவாரோ என்ற நிலை உள்ளது. இதனால் தி.மு.க. அரசு விழிபிதுங்கி நிற்கிறது. எனவே 5 ஆண்டுகளை நிறைவு செய்வதே கடினம். ஒருவேளை 5 ஆண்டுகளை தி.மு.க. அரசு நிறைவு செய்தாலும், அடுத்த தேர்தலில் படுதோல்வி அடையும். அதேநேரம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு போராடி வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவதால் அ.தி.மு.க.வுக்கு மக்களிடம் ஆதரவு பெருகுகிறது. அ.தி.மு.க. ஆட்சி எப்போது வரும் என்று கேட்க தொடங்கி விட்டனர், என்றார்.

நிர்வாகிகள்

இதில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் தேன்மொழி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னம்பட்டி பழனிசாமி, நடராஜன் தங்கதுரை, முன்னாள் எம்.பி. உதயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story