அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்,தி.மு.க. அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்;துரை வைகோ பேச்சு
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தி.மு.க. அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்று ஈரோட்டில் துரை வைகோ பேசினார்.
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தி.மு.க. அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்று ஈரோட்டில் துரை வைகோ பேசினார்.
சிறப்பான நிர்வாகம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் தினமும் ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ம.தி.மு.க. தலைமை நிலையச்செயலாளர் துரை வைகோ, ஈரோடு சத்திரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே தனது பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து அவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் மூலப்பட்டறை பகுதியில் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
முந்தைய ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வினரால் அரசு கஜானா காலியாக்கப்பட்டு அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது. ஆனால், முதல் -அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து சவால்களையும் சந்தித்து வெற்றி கண்டு இன்று சிறப்பான நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.
முதலீடு
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றை நிறைவேற்றி உள்ளார். தொழில்கள் எல்லாம் முடங்கி இருந்த நிலையை மாற்றி, பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். இதன் மூலமாக 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தொழில் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலமாக தமிழ் நாட்டின் நிலையையே மாற்றியுள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி, 1 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு, கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு குறைவாக கடன் பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி கடன் தள்ளுபடி என மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். மக்களைத்தேடி மருத்துவம் எனும் சிறப்பான திட்டத்தின் மூலம் 67 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இல்லம் தேடி கல்வித்திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
சந்தேகம்
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறப்பு குறித்து தகவல்கள் உலகம் முழுவதும் பல இடங்களில் உள்ள அந்த இயக்கத்தின் நம்பத்தகுந்த நபர்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. இப்போது இந்த விஷயத்தை அவர்கள் வெளியில் கொண்டு வந்திருப்பது, இந்த இடைத்தேர்தல் விவகாரத்தை திசை திருப்ப கொண்டு வந்திருக்கலாமோ எனும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளதாக எங்கள் தலைவர் வைகோ கருதுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது அவருடன் ஈரோடு மாநகராட்சி மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.