அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு


அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு
x

நிர்வாகிகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘சம்மன்' அனுப்பி விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் வெடித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அங்கு கூட்டம் தொடங்கிய அதே நேரத்தில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் புகுந்தார்.

அப்போது, அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது.

போலீசில் புகார்

இந்த சம்பவத்தின்போது, அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஆவணங்களும் திருடப்பட்டது. இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தாமதமாக, கடந்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

இந்த நிலையில், திடீரென இந்த மோதல் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. வெங்கடேசன் நியமிக்கப்பட்டார்.

ஆனால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முறையாக நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியதுடன், நேற்று முன்தினம் இதுகுறித்த வழக்கும் சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் எம்.பி.யால் தாக்கல் செய்யப்பட்டது.

அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆய்வு

இந்தநிலையில், நேற்று காலை 7 மணியளவில் திடீரென சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் உடன் இருந்தார்.

ஆய்வின்போது, அ.தி.மு.க. அலுவலகம் எவ்வளவு பரப்பளவில் அமைந்திருக்கிறது என்பதை கண்டறிய, 'டேப்' கொண்டு அளக்கப்பட்டது. மேலும், சூறையாடப்பட்ட அறைகளுக்கும் சென்று, அங்கு சேதப்படுத்தப்பட்ட பொருட்கள் எவை?, காணாமல் போனவை என்னென்ன? என்பது குறித்தும் குறிப்பு எடுக்கப்பட்டது.

சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு

தடயவியல் துறையினருடன் அங்கு ஆதாரங்களை சேகரித்தனர். சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆய்வுப் பணி தொடர்ந்தது. மோதல் சம்பவத்தின்போது, பதிவான சி.சி.டி.வி. காட்சிகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்தனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story