தொழிலாளியை தாக்கிய அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது வழக்கு
திட்டக்குடியில் தொழிலாளியை தாக்கிய அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சசிகுமார்(வயது 43), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் திட்டக்குடி வெள்ளாற்று பாலம் திரவுபதி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சசிகுமாரை, அங்கு நின்று கொண்டிருந்த திட்டக்குடி நகராட்சி 20-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜவேல் திட்டியதாக தெரிகிறது. இதை சசிகுமார் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
10 பேர் மீது வழக்கு
இதில் ஆத்திரமடைந்த ராஜவேல், அவருடைய நண்பர் செந்தில்குமார் மற்றும் 8 பேர் சேர்ந்து சசிகுமாரை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சசிகுமார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜவேல் உள்பட 10 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.