அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க.வின் மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் தென்சென்னை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:-
தமிழகத்தில் 9 தொகுதிகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. இலக்கு வைத்து பணியாற்றி வரும் 150 தொகுதிகளில் 9 தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன. அதில் தென் சென்னையை முக்கிய தொகுதியாக கருதுகிறோம். 2024-ல் தென் சென்னையில் பா.ஜ.க. வெற்றி பெறும் வகையில் கட்சியினர் உழைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கட்டமைப்புகளை உயர்த்த கடந்த 9 ஆண்டு காலத்தில் மத்திய அரசு ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி இந்திய ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.800 கோடியில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், ரூ.1000 கோடியில் தாம்பரம் ரெயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஜே.பி.நட்டாவை மத்திய மந்திரி என்ற முறையில் வழக்கமான மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
கூட்டணி வலுவாக உள்ளது
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலிமையாக உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தலைவர்களும் இதையே சொல்லி வருகின்றனர். எனவே எங்கள் கூட்டணி, மிக வலிமையான கூட்டணி. தி.மு.க. கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது.
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை தனது கருத்துகளை கூறி உள்ளார். அதனை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம். பா.ஜ.க. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
ரூ.5 கோடி ஒதுக்கீடு
2019-ம் ஆண்டு அப்போதைய கவர்னர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு காலை உணவு கொடுக்க முடிவு செய்தார். இதற்காக சென்னை மாநகராட்சி, அட்சய பாத்திரம் என்ற திட்டத்துக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
சுமார் 20 ஆயிரம் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவு நல்ல தரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கான கட்டமைப்புக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் தனியார் தொண்டு நிறுவனம் மாணவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கியது. அப்போது கொரோனா காலகட்டம். அதையும் தாண்டி அந்த பணி நடந்தது.
மிகப்பெரிய பொய்
அப்போது ஒரு கமிட்டி அமைக்குமாறு தமிழக அரசிடம் கவர்னர் தெரிவித்தார். ஆனால் கமிட்டி அமைக்கவில்லை. அதன்பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அட்சய பாத்திரம் திட்டத்தில் உணவு தயாராகும் கூடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், மின் இணைப்பு வழங்க அனுமதி கேட்டபோது, அதிகாரிகள் உரிய அனுமதி தரவில்லை. இதற்காக முதல்-அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் கவர்னருக்கு அ.தி.மு.க. அரசு ரூ.5 கோடி ஒதுக்கியதாக தி.மு.க. மிகப்பெரிய பொய்யை சொல்லி வருகிறார்கள்.
அ.தி.மு.க. அரசின் அந்த திட்டத்தை ஸ்டாம்ப் அடித்து புதிதாக காலை உணவு திட்டத்தை தாங்கள் தொடங்கி வைத்தது போல தி.மு.க.வினர் காப்பி அடித்து உள்ளனர். 20 ஆயிரம் மாணவர்களுக்கு உணவளிக்கும் அந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தொடங்கி வைக்க வேண்டும். கலாஷேத்ரா விஷயத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ஜ.க. நிர்வாகிகள் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.