நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணி தொடரும் -பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணி தொடரும் -பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி தொடரும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்,

பிரதமர் நரேந்திர மோடி தனது 9 ஆண்டுகால ஆட்சியில், நாட்டில் வாழும் 140 கோடி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளார். ஒட்டுமொத்த மக்களும் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். தமிழர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சேவை பணி தொடர்ந்து நடக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

கூட்டணி

எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் என்ன விசேஷம் உள்ளது. கூடிக் கலைவது அவர்களின் பொழுதுபோக்கு. வேலையில்லாமல் இருந்தவர்கள் தற்போது கூடியுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டம் முடிந்து சென்னையில் அளித்த பேட்டியில், கூட்டணியாக போட்டியிடுவோம் அல்லது இட ஒதுக்கீடு அடிப்படையில் போட்டியிடுவோம், அதுவும் இல்லை என்றால் பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துவோம் என கூறி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி தொடரும். மற்ற விஷயங்களை தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

கவர்னர் கருத்து

தி.மு.க. குடும்ப ஆட்சி தான் நடத்தும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.வில் யாராவது, அண்ணாதுரை குடும்பத்தில் உள்ள ஒருவர் இருக்கிறாரா என்பதை அடையாளம் காட்டுங்கள். எமர்ஜென்சி நேரத்தில் சிட்டிபாபு என்பவர் சிறை கொடுமையின் காரணமாக இறந்தவர். அவரது குடும்பத்தில் யாராவது இருக்கிறார்களா என அடையாளம் காட்டுங்கள்.

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதை பாராட்டுகிறேன். மணிப்பூர் விஷயம் அனைவருக்கும் வருத்தம் தரக்கூடிய ஒன்று. இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வரும் உள்துறை மந்திரி மற்றும் பிரதமரை விமர்சனம் செய்வது தவறு.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவிக்கும் கருத்துகளை அரசியல் ஆக்குகிறார்கள். அவர் உண்மையை சொல்வதால் சிலருக்கு கசக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story