அ.தி.மு.க.-பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க.-பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.-பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திண்டுக்கல்

மாநகராட்சி கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியின் கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் என்ஜினீயர் நாராயணன், நகரமைப்பு அலுவலர் சேதுராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் நகரசபை தலைவர் பசீர்அகமது, முன்னாள் கவுன்சிலர் பிரான்சிஸ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் 207 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

பாஸ்கரன் (அ.தி.மு.க.) :- எதிர்கட்சி கவுன்சிலர்களுக்கு ஒரே இடத்தில் இருக்கைகளை ஒதுக்கும்படி வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் எங்கள் கட்சியை சேர்ந்த 4 பேருக்கும் வெவ்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

துணை மேயர்:- மண்டல தலைவர்கள், எதிர்கட்சி தலைவர்களுக்கு முன்வரிசையிலும் பிற இருக்கைகள் கவுன்சிலர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. அனைவருக்கும் மாமன்ற கூட்ட அரங்கில் தான் இடம்ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

பாஸ்கரன் (அ.தி.மு.க.) :- பாலம், சாலை பணிகள் முடிந்த பின்னர் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதனால் பணிகள் தரமாக இல்லை. எனது வார்டுக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தகவல் தெரிவிப்பதில்லை.

திருவள்ளுவர் சிலை

ஜான்பீட்டர் (தி.மு.க.):- மக்களின் வசதிக்காக பணிகளை முடித்து விட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 34-வது வார்டில் ஆய்வுக்கு சென்ற போது கவுன்சிலரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

ராஜ்மோகன் (அ.தி.மு.க.) :- ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து கவுன்சிலர்களுக்கும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

துணை மேயர்:- 34-வது வார்டில் மக்களின் நலனுக்காக பணிகள் நடந்தன. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை பற்றி பேச அவர் வந்ததாக தெரியவில்லை.

ஆனந்த் (தி.மு.க.) :- அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சியினர் யாரையும் பேசுவதற்கு கூட அனுமதித்தது இல்லை. தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கணேசன் (மா.கம்யூ) :- திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலையை திறக்க தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

தனபாலன் (பா.ஜனதா) :- திருவள்ளுவருக்கு சிலை வைப்பதை வரவேற்கிறோம். அதேபோல் விருப்பாட்சி கோபால்நாயக்கருக்கு, கோபாலசமுத்திரக்கரையில் சிலை அமைக்க வேண்டும்.

கடும் வாக்குவாதம்

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 34 கடைகள் ஏலம் தொடர்பான தீர்மானம் பற்றி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் பேச தொடங்கினார். உடனே, அது தனது வார்டுக்குள் வருவதால் தான் பேசிக் கொள்வதாக காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திக் கூறினார்.

மேலும் தி.மு.க., காங்கிரஸ், மா.கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் எழுந்து தனபாலன் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தனபாலன் தொடர்ந்து பேசியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தனபாலன் (பா.ஜனதா) :- 34 கடைகள் ஏலம் தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ள வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதுவரை தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஜானகிராமன் (தி.மு.க.) :- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை அவதூறாக பேசிய பா.ஜனதா கவுன்சிலரை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

ஆனந்த் (தி.மு.க.) :- அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

தனபாலன் (பா.ஜனதா) :- நான் அமைச்சரை பற்றி தவறாக பேசவில்லை. ஆணையாளர் கூறியதை தான் தெரிவித்தேன்.

துணை மேயர்:- பஸ் நிலைய கடைகள் விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி ஏலமிடப்பட்டன.

ஜோதிபாசு (மா.கம்யூ) :- அமைச்சரை பற்றி தவறாக பேசியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசில் வழக்கு உள்ளவரை மாமன்றத்துக்குள் அனுமதிக்க கூடாது.

தனபாலன் (பா.ஜனதா) :- எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

வெளிநடப்பு

ஜோதிபாசு (மா.கம்யூ) :- அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக கடைகளை கட்டாததால், ரூ.40 லட்சத்தில் சீரமைத்து முறையாக ஏலமிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் பா.ஜனதா கவுன்சிலர் ஆகியோர் 34 கடைகள் ஏலம் தொடர்பான தீர்மானத்தை நிறுத்தி வைக்கக்கோரி மேயர் இருக்கைக்கு முன்பே வந்து கோஷமிட்டனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் எதிர் கோஷமிட்டனர். இதனால் மாமன்ற கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உள்ளே வந்தனர். இதையடுத்து அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் கோஷமிட்டப்படி வெளிநடப்பு செய்தனர்.

மாறி, மாறி கோஷங்கள்

அப்போது அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலரும், ஆதரவு தெரிவித்து சிலரும் மாறி, மாறி கோஷமிட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து கவுன்சிலர்களை அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

துணை மேயர்:- அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சேர்ந்து வெளிநடப்பு செய்துள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட அந்த கடைகள் முறையாக வாசல் கூட இல்லாமல் இருந்தன. மழைக்காலத்தில் கடைகள் ஒழுகின. அதோடு கடைகளை ஏலமிடவில்லை. அப்போது எல்லாம் பா.ஜனதா கேட்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடைகள் சீரமைக்கப்பட்டு முறைப்படி ஏலமிடப்பட்டன. ஆனால் அரசியல் செய்யும் வகையில் கடைகள் ஏலம் குறித்து பேசுகின்றனர்.

மேயர்:- பஸ்நிலையத்தின் 34 புதிய கடைகளும் விதிகளுக்கு உட்பட்டு தான் ஏலமிடப்பட்டன. இதில் யாருடைய தலையீடும் இல்லை. எந்தவித விதிமீறலும் இல்லை. அது தொடர்பாக ஆணையாளர் விளக்கமும் கொடுத்துவிட்டார். எனவே அந்த பிரச்சினைக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைப்போம்.

ஜான்பீட்டர் (தி.மு.க.) :- அமைச்சரை பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா கவுன்சிலருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

உடனே தி.மு.க. கவுன்சிலர் ஆனந்த் எழுந்து தான் அதை வழிமொழிவதாக கூறினார்.

மேற்கண்டவாறு கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.


Next Story