அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி நடந்தது. இந்த பொதுக்குழுவுக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு சாதகமான உத்தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. திட்டமிட்டப்படி பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இந்தநிலையில், சண்முகம் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்து விட்டதாலும், சுப்ரீம் கோர்ட்டும் பொதுக்குழுவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டதாலும், சண்முகம் தொடர்ந்துள்ள இந்த வழக்கு காலாவதியாகி விட்டது என்று வாதிடப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.ராஜலட்சுமி, இந்த வழக்கில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். சண்முகம் தொடர்ந்துள்ள இந்த வழக்கில்தான் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளதா? என்பதை உறுதி செய்ய முடியும் என்று சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த தீர்ப்பைத்தான் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. எனவே, அவகாசம் வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.