அ.தி.மு.க. ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தில் நிறைவேற்றிய திட்டங்கள் என்னென்ன? பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்துக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றி பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசினார். சிவகங்கை பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்துக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றி பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகங்கை பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தனி மாவட்டம்
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பின்பு சிவகங்கையை தனி மாவட்டமாக அறிவித்து செயல்படுத்தினார். ஜெயலலிதா காலத்தில் சிவகங்கை புறவழிச்சாலை கொண்டுவரப்பட்டது. வேலு நாச்சியார் மணிமண்டபம், குயிலி மணிமண்டபம், மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கம்புணரி, காளையார் கோவில் உள்ளிட்ட தாலுகாக்கள் ஏற்படுத்தப்பட்டன.
தமராக்கியில் ரூ.10 கோடியில் தடுப்பணை ஏற்படுத்தப்பட்டது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். சிவகங்கை பஸ் நிலையத்தை புனரமைத்தோம். காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் நகரங்களை இணைத்து சுற்றுச்சாலை அமைத்தோம். புலிக்குளம் காளைகள் ஆராய்ச்சி நிலையம் அமைத்தோம். திருப்புவனம், தட்டாங்குளம், மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் ரூ 50 கோடி மதிப்பில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டன. மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பல கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டித் தந்தோம். கீழடி அருங்காட்சியகத்திற்காக ரூ.18 கோடியை அ.தி.மு.க. ஆட்சியில் தான் ஒதுக்கி தந்தோம். சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டன. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விலையில்லா மண் வழங்கப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தையே முடக்கி விட்டனர். 2 ஆயிரம் மினி அம்மா கிளினிக்கை மூடினார்கள். தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. முதியோர் பென்ஷன் ரத்து செய்யப்பட்டது. ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டதன் விளைவை வருகிற தேர்தலில் ஸ்டாலின் சந்திப்பார்.
மக்கள் மனதில் வாழ்கிறார்கள்
சிவகங்கை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டன. காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டு உள்ளன. அதேபோல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேல்நிலைப் பள்ளிகளாகவும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் தரம் உயர்த்தப்பட்டன. ஆனால் இந்த 22 மாத கால ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்திற்கு தி.மு.க. என்னென்ன நலத்திட்டங்கள் செய்தது என்பதை பொதுமக்களிடம் விளக்க முடியுமா? ் எம்.ஜி.ஆர். மாணவர்களுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சாதனை படைத்தாரே? அதேபோல ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், சைக்கிள், மடிக்கணினி என ஏராளமானவற்றை இலவசமாக அளித்து ஏழை மாணவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுத்தாரே? அவர்கள் இருவரும் ஏழைகள் மீது பாசம் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் இந்த மண்ணில் இருந்து மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கருணாநிதி குடும்பத்தில் கருணாநிதி, அதற்கு பின்பு ஸ்டாலின் அதற்கு பின்பு உதயநிதி என்று பரம்பரையாக வருகிறார்கள். நீங்கள் என்ன அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களா? வேறு ஆட்களே இல்லையா?
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க.வில் இணைந்தனர்
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வக்கீல் தங்கபாண்டியன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். முடிவில் சிவகங்கை நகர் செயலாளர் என்.எம்.ராஜா நன்றி கூறினார். முன்னதாக சிவகங்கை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.