அ.தி.மு.க. மாநாடு தி.மு.க.வின் பின்னடைவுக்கு தொடக்க புள்ளியாக இருக்கும்- செல்லூர் ராஜூ பேட்டி
மதுரை அ.தி.மு.க. மாநாடு தி.மு.க.வின் பின்னடைவுக்கு தொடக்க புள்ளியாக இருக்கும் என செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை அ.தி.மு.க. மாநாடு தி.மு.க.வின் பின்னடைவுக்கு தொடக்க புள்ளியாக இருக்கும் என செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை மாநாடு
மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக செல்லூர் ராஜூ ஏற்பாட்டின் பேரில் அழைப்பிதழ் கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. முதலில் அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். நேற்று அரசமரம் பிள்ளையார் கோவிலில் மாநாடு அழைப்பிதழை வைத்து செல்லூர் ராஜூ வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அழிக்கும் சக்தியாக இருக்கும்
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அனைத்து வார்டுகளிலும் உள்ள மக்களுக்கும் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் கொடுக்க இருக்கிறோம். எங்களது மாநாட்டின் கதாநாயகன் எடப்பாடி பழனிசாமி தான். அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தான் எல்லாம். மாநாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் அமருவதற்கு இருக்கைகள் போடப்படுகின்றன. மாநாட்டிற்கு வருகை தரும் அனைவருக்கும் உணவு தருகிறோம். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.
மாநாட்டில் டிஜிட்டல் மேடை அமைக்கப்படுகிறது. அ.தி.மு.க.வின் சாதனைகளை விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்படுகிறது. மாநாட்டில் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாநாட்டின் முத்தாய்ப்பாக எடப்பாடி பழனிசாமி மாலை பேசுகிறார். இந்த மாநாடு தி.மு.க.வை அழிக்கும் சக்தியாக இருக்கும். தி.மு.க.வின் பின்னடைவிற்கு இந்த மாநாடு தொடக்க புள்ளியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.